ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள தலைமைத்துவப் பிரச்சினைக்கு எதிர்வரும் 20ம் திகதி திங்கட்கிழமை தீர்வு எட்டப்படும் என ரணில் ஆதரவு அணியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க,சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகிய மூவரும் ஒரு மேசையில் அமர்ந்து பேச்சு நடத்தி, இறுதி முடிவை அறிவிப்பார்கள் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றிரவு கூடியது. இதில் சுமார் 65 உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் ஆராய்வதற்குக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் ஆரம்பத்தில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதால் சஜித் அணியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், கட்சித் தலைமைத்துவத்தை சஜித்துக்கு வழங்குவது தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறும் வலியுறுத்தினர்.
எனினும், வாக்கெடுப்பை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவும் அவரின் சகாக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இறுதியில் சஜித் ஆதரவு அணியினரால் வாய்மொழி மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52 பேர் ஆதரவு தெரிவித்தனர். எனினும், கடும் அமளி துமளி ஏற்பட்டதால் ரணில் வெளியேறினார். இதனால் தீர்மானம் எதுவுமின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சஜித்தைத் தலைவராக்கும் வரையில் சிறிகொத்தவில் தங்கியிருப்பதற்கு ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட சில எம்.பிக்கள் தீர்மானித்திருந்தாலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ரணில் விக்ரமசிங்கவுக்கு கால அவகாசம் வழங்குவதற்குத் தீரமானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரமே எதிர்வரும் திங்கட்கிழமை ரணில், கரு, சஜித் ஆகிய மூவரும் நேரில் சந்தித்துப் பேச்சு வார்த்தையினை நடத்தி தலைமைத்துவம் தொடர்பில் இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.