13 இலட்சம் வாக்கு வாங்கி இருப்பதாக கூறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், பொதுஜன பெரமுனவினரை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனர். அவர்களிடம் 13 இலட்சம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகின்றனர்.
அந்த வாக்கு வங்கி அவர்களுடையது அல்ல. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 8,500 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட வாக்குகள் கிடைத்தனவே அன்றி கட்சியின் வாக்குகள் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி பொதுஜன பெரமுனவுக்கு சென்று விட்டது.
வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை காட்டி, பிரதமர் மகிந்த ராஜபக்சவை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அரசியல் நிலைமை என்னவென்று நன்கு தெரியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இல்லை.
பெயருக்கு மாத்திரமே அந்த கட்சி உள்ளது. அதேவேளை சபாநாயகர் பதவியை எதிர்பார்த்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தகுதியான இடமில்லை. இதன் காரணமாக எமக்கு வாக்கு வங்கி இருக்கின்றது என கூறி, பொதுஜன பெரமுனவுக்கு உதவுவதாக தெரிவித்து, தேர்தலின் பின் மக்கு பதவிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் பதவியை பெற எதிர்பார்த்துள்ளார். இது செய்யக் கூடிய வேலையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.