போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கி வருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய அரசாங்கம் கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்கவுக்கு பதவி உயர்வை வழங்கியமை தொடர்பில் எமது செய்தியாளர் நாடாளுமன்ற உறுப்பினரை நேற்று தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்று ஐ,நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் இன்று ஆட்சியில் இருக்கின்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய இராணுவத்தினருக்கும் பதவி உயர்வுகளை இந்த அரசு வழங்கி வருகின்றது. இதுதான் இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடாகும். இந்தச் செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மற்றும் இராணுவத் தளபதிகள் ஐ.நா மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள். அப்பட்டிப்பட்ட ஓர் அரசின் கீழ் மேலும் பல இராணுவத்தினருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.
இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதைத்தான் செய்வார்கள் என்று எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட டி.கே.பி.தசநாயக்கவுக்கு ஜனாதிபதியால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற தரப்பினர் என்று அனைவரும் இவ்வாறான செயல்களைக் கண்டிக்க வேண்டும்.
நாங்களும் இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.