தமிழர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பறித்து விட்டு தரப்படும் அபிவிருத்தி எமக்கு அழிவுகளையே தரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பாரதிபுர மக்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
தமிழர்கள் இந்த மண்ணிலே சம உரிமையுடனும், சம அந்தஸ்துடனுமே வாழ விரும்புகிறோம் என்பதையே தமிழ் மக்கள் கடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.
இதை சிங்களத் தலைவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் இந்த அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் தமிழர்களுக்கு சோறு தான் முக்கியம் என எள்ளி நகையாடும் வகையில் கருத்து தெரிவித்தார்.
எமது இனத்தின் விடுதலைக்காகவே கந்தகம் சுமந்தும் இரவு பகலாக சரியான ஒரு வேளை உணவு கூட உண்ணாமல் களங்களில் சமராடி உயிர் துறந்தவர்கள்.
இவர்களின் தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்தும் வகையில் அவரின் கருத்துக்கள் உள்ளன.
உரிமை அற்ற அபிவிருத்தியினால் எந்தவகையான பிரயோசனமும் இல்லை என்பதற்கு கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் நடந்த விடயங்கள் மிகச்சிறந்த உதாரணமாகும்.
அப்போது இஸ்லாமிய சகோதரர்களில் எத்தனை அமைச்சர்கள் இருந்தார்கள். அத்துடன் விசேட அதிரடிப் படையினருக்கு லத்தீப் என்பவரே பொறுப்பாக இருந்தார்.
அவர்களால் தங்கள் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எதுவும் செய்ய இயலாதவர்களாய் இருந்தார்கள் அவ்வாறே எமக்கும் நிகழும் என கூறியுள்ளார்.
குறித்த சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.