ஐ.தே.க தலைமை பதவியை விட்டு இறங்க மாட்டேன் என ரணில் அடம்பிடித்து வரும் நிலையில், ரணில் தரப்பை தவிர்த்து புதிய கூட்டணி அமைக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சஜித் தலைமையிலான பெரும்பான்மை ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டணியில் இணைகிறார்கள்.
இவர்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய பங்காளிகளும் இணைகிறார்கள்.
நேற்று நடைபெற்ற பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், இந்தகூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் தலைமைத்துவ சபையின் தவிசாளராக சஜித் பிரேமதாச செயற்படுவார். உப தலைவராக சம்பிக்க ரணவக்க செயற்படவுள்ளார்.
நேற்றைய கூட்டம் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசா தலைமையில் பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்படும். இக்கூட்டணியில் ஐதேக உட்பட ஐ.தே.முயின் அனைத்து கட்சிகளும் இடம் பெறும். புதிய கட்சிகளும் உள்வாங்கப்படும்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பிடிவாதத்தை திருத்திக்கொண்டு, புதிய மாற்றங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். ஆனால் அவரது மனமாற்றத்திற்காக நாம் காத்திருக்க போவதில்லை.
தற்சமயம் ஐ.தே.கட்சியின் 55 எம்பிக்களும், ஐ.தே.முன்னணியின் 20 எம்பிக்களும் எமது அணியிலேயே இருக்கின்றார்கள்.
சபாநாயகர் கரு ஜயசூரியவை உள்வாங்கும் நடவடிக்கையையும் நாம் உடனடியாக ஆரம்பித்துள்ளோம்.
நேற்றைய கூட்டத்தில், ஐ.தே.க சார்பாக சஜித் பிரேமதாசா, ரஞ்சித் மத்தும்பண்டார, கபிர் ஹசீம், கூட்டு கட்சிகளின் சார்பாக மனோ கணேசன், திகாம்பரம், ரவுப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


















