19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக ஜனாதிபதி சட்டையின்றி காற்சட்டையை மாத்திரமும், பிரதமர் காற்சட்டையின்றி சட்டையை மாத்திரம் அணிந்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், அந்த திருத்தச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி வழங்கியதன் காரணமாகவே நாங்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கினோம். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாக இலங்கையில் மூன்று அதிகார மையங்கள் உருவாகின.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் காற்சட்டையை மாத்திரம் வைத்து விட்டு சட்டையை கழற்றினர். காற்சட்டையின்றி பிரதமருக்கு சட்டையை அணிவித்தனர். மேலும் பல துண்டு துணிகளை பலவந்தமாக சபாநாயகர் அணிந்துக்கொண்டார்.
19ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். அதனை நீக்கும் போது தேர்தல் முறையில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.