ஈரானிய ஏவுகணைக்கு உக்ரேனிய விமானம் இலக்கான அன்று, எல்லையில் அமெரிக்க போர் விமானங்கள் வட்டமிட்டதாக தற்போது ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.
ஈரான் எல்லையில் சம்பவத்தன்று, அமெரிக்க போர் விமானங்கள் வட்டமிட்ட தகவல் தொடர்பில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ரஷ்யா கோரிக்கை வைத்துள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈரானிய ஏவுகணைக்கு உக்ரேனிய விமானம் இலக்கான அதே வேளை அமெரிக்காவின் 6 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வட்டமிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையில் அதுபோன்ற ஒரு சூழல் போருக்கு வழிவகுத்திருக்கும் என குறிப்பிட்ட லாவ்ரோவ், சம்பவத்தின் சூழலைப் புரிந்துகொள்வது முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு ஈரானியர்கள் அமெரிக்காவிடமிருந்து மற்றொரு தாக்குதலை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அது எந்த வடிவத்தில் அமையக்கூடும் என்று தெரியவில்லை எனவும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்களின் அதிகரிப்பு பிராந்தியத்தில் எந்தவொரு நெருக்கடியையும் தீர்க்க உதவாது, பதட்டங்களை அதிகரிக்கவே செய்யும் என்றார் லாவ்ரோவ்.
ஜனவரி 8 ஆம் திகதி, உக்ரைன் பயணிகள் விமானமானது தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
ஈராக் இராணுவத் தளங்களில் ஈரான் ஏவுகணைகளை வீசிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த விமான விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



















