ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று (19) சபாநாயகரும் ஐ.தே.க.யின் சிரேஸ்ட உறுப்பினருமான கருஜயசூரியவை சந்திக்க ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகரின் உத்தியோகபுர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கரு ஜயசூரியவுக்கு கட்சியின் பல்வேறு பொறுப்புக்களை வழங்க கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. தற்பொழுதும், எதிர்வரும் தேர்தலில் தலைமைத்துவ சபையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரிடமிருந்து எதிர்ப்புக்கள் எழுந்தன. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை வழங்குமாறு கடந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உத்தியோகப்பற்றற்ற வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அன்றைய கூட்டத்துக்கு வருகை தந்திருந்த 65 பேரில் 52 பேர் சஜித்துக்கு கட்சித் தலைமையை வழங்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்தது. இந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவுக்கும் கருஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.