எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் போட்டியிடும் முடிவை கொள்கையளவில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி எடுத்திருந்தாலும், வடக்கு கிழக்கில் கை சின்னத்திலேயே போட்டியிடும் என தெரிகிறது.
சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இது குறித்து கருத்து வெளியிடும்போது, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதென முடிவெடுத்திருந்தாலும், அனைத்து மாவட்டங்களிலும் இதன்படி களமிறங்க வேண்டிய தேவையில்லை. பெரமுன கடந்த ஜனாதிபதி தேர்தலில் 70 இலட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். அதேபோல, உள்ளூராட்சி தேர்தலில் பெரமுனவை விட, சுதந்திரக்கட்சி அதிக வாக்கை பெற்றிருந்தது. இவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி அங்கயன் இராமநாதன், வன்னி எம்.பி காதர் மஸ்தான் ஆகியோர், பெரமுனவின் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், அப்படி போட்டியிட்டால் வெற்றியீட்ட முடியாதென கட்சி தலைமைக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதையடுத்தே, இந்த மாற்று யோசனையை சு.க முன்னெடுக்கிறது.