உலகின் அதிகார சக்திகளின் மோதல்களுக்கு அகப்பட்டுக் கொள்ளாமல் இலங்கை நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை மிக்க ஒரு நாளாக அமைந்திருந்தது.
ஏனென்றால் அன்று அவர் ஒரே நாளில் உலகின் மூன்று முக்கிய அதிகார சக்திகளின் உயர்நிலைப் பிரதிநிதிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி ஆகிய மூவரையும் ஒரே நாளில் குறிப்பிட்ட சில மணித்தியால இடைவெளிக்குள் சந்தித்துப் பேசியிருந்தார் ஜனாதிபதி.
இந்த மூவரினது சந்திப்புக்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கவில்லை. மூன்று நாடுகளினது இலக்குகளும் நோக்குகளும் வேறுபட்டவையாக இருந்தன.
இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைத் தொடரும் இலக்குடன் வந்திருந்தார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ்.
இலங்கையுடன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் வந்திருந்தார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ்.
இலங்கையில் சீனாவின் பொருளாதார முதலீடுகள் தொடர்பாகவும் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் பேச வந்திருந்தார் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி.
இந்த மூவரிடமும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பேசப்பட்ட முக்கியமான ஒரு பொதுப்படையான விடயமும் இருந்தது.
அது ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரம். ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளன.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமும் முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் ஜெனீவா தீர்மானத்தை ஏற்க முடியாது, அதிலிருந்த விலகி விடுவோம் என்று கூறியிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இப்போது ஜெனீவா தீர்மானம் தொடர்பாக உள்ளக கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருப்பதாக தகவல்.
விரும்பியோ விரும்பாமலோ இலங்கை அரசாங்கம் ஜெனீவா கூட்டத்தொடரில் ஏதோ ஒரு பதிலைக் கூறியே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறது.
இவ்வாறான இக்கட்டான நிலையில் இருக்கும் சூழலில் சீன மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள், சர்வதேச அரங்கில் குறிப்பாக ஐ.நா அரங்கில் இலங்கைக்கு உதவியாக நிற்போம் என்று கூறியிருக்கின்றன.
இலங்கை மீது மூன்றாவது நாடு ஒன்று தலையீடு செய்வதை சீனா அனுமதிக்கப் போவதில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி கொழும்பிலிருந்து புறப்பட முன்னர் கூறியிருந்தார்.
ஆக ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் இந்தியாவின் ஆதரவையும் பெற்றுக் கொண்டு விட்டால் இந்த முறை ஜெனீவா கூட்டுத் தொடரை சுலபமாக கையாண்டு விடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது அரசாங்கம்.
ஜெனீவா கூட்டத் தொடரில் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கூட தமிழ் ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில் கூறியிருக்கிறார்.
ஆனால் சீன ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசிய அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், ஜெனீவா கூட்டத் தொடர் குறித்தும் பேசியிருக்கிறார்.
அவர் பல முக்கியமான விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியிருக்கிறார். ஜெனீவா கூட்டத்தொடரில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
அத்துடன் மனித உரிமைகள், நாடாளுமன்றத் தேர்தல், எம்.சி.சி உடன்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கின்றன. இந்தச் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடிதம் ஒன்றையும் நேரில் கையளித்திருக்கிறார் அலிஸ் வெல்ஸ்.
அந்தக் கடிதத்தில் இலங்கையுடனான கூட்டு மற்றும் விருப்பங்கள் குறித்த அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து எடுத்துக் கூறப்பட்டிருந்தது என கொழும்பிலிருந்து திரும்ப முன்னர் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் அலிஸ் வெல்ஸ்.
உண்மையில் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் என்ன என்பது இன்னமும் வெளியே வரவில்லை. ஆனால் அதில் அரசாங்கத்திற்கு சிக்கலான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் சந்தித்தவுடனேயே அவர் எம்.சி.சி உடன்பாடு குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன.
ஆனால் மறுநாள் அரசாங்கப் பேச்சாளரான பந்துல குணவர்தன அதனை நிராகரித்திருந்தார். அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிகாரில் சந்திப்பை நடத்தினால் எதிர்மறையாக சிந்திக்கக்கூடாது என்றம் அவர் கூறியிருந்தார்.
எம்.சி.சி உடன்பாடு மனித உரிமைகள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசப்பட்டதை அலிஸ் வெல்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன், ஜனாதிபதியையும் பிரதமரையும் மற்றொரு அமெரிக்க முக்கியஸ்தரும் சந்தித்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட பதில் உதவியலாளரும், தேசிய பாதுகாப்புச் சபைக்கான தெற்கு மத்திய ஆசியாவிற்கான மூத்த பணிப்பாளருமான லிசா கேட்டிஸ் தான் அவர்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்பட்ட கடிதம் அவரது பதில் உதவியாளர் லிசா கேட்டிஸ் சந்திப்புகளில் பங்கேற்றது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்காவும் தீவிரமான நகர்வுகளை முன்னெடுக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இலங்கையில் ரஷ்யா தனது பாதுகாப்பு நலன்களை விரிவுப்படுத்த நினைக்கிறது. அதற்கான பேச்சுகளிலும் ஈடுபட்டுள்ளது. சீனாவும் முதலீடுகளின் மூலம் இலங்கையைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது.
இவ்வாறான நிலை தொடர்ந்தால் இலங்கை தனது கையை விட்டுப் போய் விடும் என்ற கவலை அமெரிக்காவுக்கு இருக்கிறது. இந்த நிலையில் இலங்கையை கைக்குள் வைத்திருப்பதற்கு அமெரிக்கா தரப்பில் இரகசிய காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகங்கள் உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த மாத இறுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உத்தேசித்திருக்கிறார். அவரது பயணத் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படாவிடினும் அதற்கான பேச்சுக்கள் இரண்டு நாடுகளினதும் இராஜ தந்திரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிற்கு அடுத்த மாத இறுதியில் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படும் பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இலங்கைக்கும் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
2016ஆம் அண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது பயண ஒழுங்கு நாட்கள் இலங்கையில் வெசாக் கொண்டாட்டங்கள் நடைபெறும் காலம் என்பதால் இலங்கை அந்த திகதிகளை நிராகரித்திருந்தது.
அதற்குப் பின்னர் பராக் ஒபாமாவோ அல்லது அவருக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியாகிய டொனால்ட் ட்ரம்போ, இலங்கைக்கு வரும் முனைப்பை காட்டவில்லை.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலில் அமெரிக்கா இன்னும் தீவிரமாகச் செயற்பட வேண்டிய நிலையை உணர்த்தியிருக்கிறது. அமெரிக்கா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் கைகுலுக்கிக் கொள்ளத் தயங்காது.
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் கைகோர்த்துக் கொள்வதற்கு சீனாவோ, ரஷ்யாவோ அல்லது ஜெனீவாவோ தமிழர் விவகாரங்களோ தடையாக இருப்பதை அமெரிக்கா விரும்பாது.
இந்த நிலையில் நிலைமையை தமது சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக அடுத்த மாதம் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது ஒரு குறுகிய நேரப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு வந்து சென்றால் கூட அது ஆச்சர்யமில்லை.
தேர்தல் காலத்தில் எம்.சி.சி உள்ளிட்ட அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து மோசமான விமர்சனங்களை முன்வைத்து வந்த தற்போதைய அரசாங்கம் இப்போது பெட்டிப் பாம்பாக அடங்கியிருக்கிறது.
இதற்கு அமெரிக்கா தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணம் என்று பேசப்பட்டாலும் அவ்வாறு எதுவும் இல்லை என்று அரசாங்கமே கூறுகிறது.
தமிழர் விவகாரத்தையோ அல்லது வேறெந்த விவகாரத்தையோ தூக்கி நிறுத்தி தனது நலன்களை இழக்க அமெரிக்கா விரும்பாது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனது நாட்டினதும் தனது மக்களிதும் பாதுகாப்புத்தான் முக்கியமானது.
அதற்காக வேறெந்த நலன்களைத் துறக்கவும் தயங்காது. ஒரு பக்கம் அமெரிக்கா இன்னொரு பக்கம் சீனா, மற்றொரு பக்கம் ரஷ்யா என்று உலக வல்லாதிக்க சக்திகளின் ஆட்டக்காய்களுக்கு மத்தியில் சிக்கியிருக்கிறது இலங்கை.
இது போன்றதொரு நிலை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் வரும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். “புவியியல் ரீதியான மூலோபாய அமைவிடத்தில் இலங்கை இருப்பதால் பல அரசியல் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அவற்றைக் கடப்பதற்கான ஒரே வழி, பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். பொருளாதார சுதந்திரம் அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யும்” என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தில் இருந்தே அவர் எதிர்கொண்டுள்ள நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.