கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் “தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே” என கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து சம்பந்தமாக அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கருணா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக பதவி வகித்தார் என்பதை நான் அறிவேன். எனினும் கடந்த காலங்களில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் சம்பந்தப்படவில்லை.
நான் அறிந்த காலப்பகுதியில் அவர் சுதந்திரக் கட்சியில் எந்த பதவிகளையும் வகிக்கவில்லை என்பதுடன் எந்த பணிகளிலும் ஈடுபடவில்லை.
கருணா அம்மான் அன்றைய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு பிரபாகரனிடம் இருந்து தனது உயிரை மிகவும் கஷ்டப்பட்டு பாதுகாத்து கொண்டார் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகள் அமைப்பால் அவரது குடும்பத்திற்கும் பாரதூரமான ஆபத்துக்கள் ஏற்பட்டது.
இப்படியான நிலையில் தேசிய தலைவர் பிரபாகரன் மாத்திரமே என கருணா ஏற்றுக்கொள்கிறார் என்றால் அவருக்கு மனநிலை பாதிப்போ, வேறு ஏதோ ஒன்று இருக்கக் கூடும் என நான் நினைக்கின்றேன்.
தனது தேசிய தலைவர் பிரபாகரன் மாத்திரமே என அவர் கூறுகிறார் எனில் நாட்டின் சட்டம் ஏனையோருக்கு செயற்படுத்தும் விதமாக அவருக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் எனவும் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.