ஈரான் ஆதரவு ஹவுத்திகள் யேமன் நகரில் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில், முகாமில் இருந்த 70 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ஆதரவு ஹவுத்திகள் சனிக்கிழமை யேமன் நகரமான மரிப்பில் இராணுவ பயிற்சி முகாமைத் தாக்கியுள்ளனர்.
ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 70 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் டசின் கணக்கானவர்களைக் காயமடைந்துள்ளனர் என்றும் சவுதி அரசு தொலைக்காட்சி சனிக்கிழமை மாலை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு இரையான முகாமானது ரத்தமும் சதையுமாக கோரமான நிலையில் காட்சியளித்ததாக செய்திகள் வெளிவருகின்றன.
முகாமில் சூரிய அஸ்தமன பிரார்த்தனையைத் தொடர்ந்து ஒரு மசூதிக்கு அருகே கூடியிருந்த படையினர் கூட்டத்தை இந்த தாக்குதல் குறிவைத்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கு இடையே யேமனில் மறைமுக யுத்தம் நடந்து வருகிறது.
ஜனாதிபதி அப்துல்-ரபு மன்சூர் ஹாடியின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி இந்த போரில் முதன்முறையாக நுழைந்தது,
இது ஹவுத்திகள் தலைநகர் சனாவில் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட காரணமாக அமைந்ததுடன், தற்போது தெற்கு துறைமுக நகரமான ஏடனில் முகாமிடவும் காரணமாக அமைந்துள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மன்சூர் ஹாடி,
ஹவுத்தி போராளிகளின் வெட்கக்கேடான செயல் இது, சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் அமைதியை விரும்பவில்லை என்பதையும், அந்த பகுதியில் ஈரானின் மறைமுக திட்டத்தை நிறைவேற்றும் மலிவான கருவியாக செயல்படுகின்ரனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன என்றார்.
ஹவுத்திகளின் திடீர் தாக்குதலில் பலியானவர்கள் முக்கியமாக இராணுவத்தில் சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலில் குறைந்தது 150 பேர் காயமடைந்துள்ளனர்.
யேமனின் நீண்டகாலமாக நிறுத்தப்பட்ட சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்க ஐ.நா.வின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.