எம்.சீ.சீ. உடன்படிக்கை சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியினர் இரட்டை நாக்கு நிலைப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.சீ.சீ. உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் எனவும் அது நடைமுறைப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
எனினும் அவர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே அந்த உடனபடிக்கையில் கையெழுத்திட வேண்டும் என முடிவுக்கு வந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திடுவது என்ற உத்தியோகபூர்வ முடிவுக்கு வந்திருந்ததுடன் பிக்குமார் உண்ணாவிரதம் இரு்நததால் அதனை நிறுத்தினர்.
அப்போதைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அது பற்றி எதனையும் பேசவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையிலும் அவர் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூட எம்.சீ.சீ. உடன்படிக்கை பற்றி பேசவில்லை.
ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்கள் இருக்கும் போது எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கையெழுத்திட அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அந்த உடன்படிக்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கையெழுத்திடப் போவதாக அன்றைய பிரதமர் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரியாமல், மக்களுக்கு உடன்படிக்கையில் உள்ள விடயங்களை தெரியப்படுத்தாமல், அதில் கையெழுத்திடக் கூடாது என வலியுறுத்தியிருந்தேன்.
ஜனாதிபதித் தேர்தல் நடக்க சில தினங்கள் இருக்கு சூழலில் வெளிநாடு ஒன்றுடன் அவசரமாக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது தார்மீகமானதல்ல என நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மக்கள் ஆணையை பெறும் தரப்பு எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் முக்கிய அமைச்சராகவும் இந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முற்றிலும் அமைதியாக இருந்தார்.
எம்.சீ.சீ உடன்படிக்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி நிபுணத்துவ குழுவை நியமித்துள்ளார். அந்த குழுவின் அறிக்கையை ஆராய்ந்து அது சம்பந்தமாக எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என்பதை அமைச்சரவை, நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
தற்போதைய அரசாங்கம் எந்த காரணம் கொண்டும், இப்படியான உடன்படிக்கையில், நாடாளுமன்றத்திற்கோ, மக்களுக்கு தெரியாமல் இரகசியமாக கையெழுத்திடாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்திற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையிலான வித்தியாசம் இதுதான் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.