ஐக்கிய தேசியக் கட்சியில் வலுப்பெற்றுள்ள தலைமைத்துவ இழுபறிக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் தலைமைத்துவ சபை ஒன்றை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் முடியும்வரை தலைமைத்துவ சபையின் ஊடாக வழிநடத்தல்களை மேற்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆதரவு அணியினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவரது ஆதரவு தரப்பு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாரிய அழுத்தம் கொடுத்து வருகின்றது.
சஜித் தரப்பை சமரசப்படுத்த ரணில் விக்ரமசிங்க பல முயற்சிகளை எடுத்த போதிலும், தலைமைத்துவ விடயத்தில் சஜித் தரப்பு உறுதியாகவுள்ளது.
அத்துடன், சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த பின்னணியிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இழுபறி நிலை தொடர்கிறது.
இந்நிலையில் சஜித் ஆதரவு தரப்புக்கும் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் தலைமைத்துவ சபையொன்றை அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.