அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் செய்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி ஆருடம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெற செய்வதற்காக இலட்சக்கணக்கான வாக்குகளை நம்பிக்கையோடு வழங்கிய அனைத்து வாக்காளர்களும் இன்று ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தை கிழித்துப்போடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறிய அறிவிப்பை நினைத்து தாம் வியந்ததாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
சுதந்திர சதுக்கத்தில் வைத்து எம்.சி.சி ஒப்பந்தத்தை கிழித்து எறிவதாகவும், புதிதாக ஒப்பந்தம் செய்வதாயின் அதுகுறித்து ஆராய்ந்து சரியானதை செய்ய ஆலோசிப்பதாகவும் பௌத்த தேரர்களுக்கு முன்பாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த ஒப்பந்த்தில் நல்ல விடயங்களை அவதானித்து கைச்சாத்திடுவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளராகிய அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் தெரிவித்திருக்கின்றார்.
அன்று தேர்தல் காலத்தில் அவர்கள் கூறியதும், இப்போது கூறிவருவதும் ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படுகின்றது. எமக்கு அதுகுறித்து குழப்பமில்லை. மாறாக மகிழ்ச்சியே ஏற்படுகிறது.
இன்று வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அவர்கள் பொய் வாக்குறுதியையே அளித்திருப்பது இன்று புலப்படுகின்றது. மரக்கறி விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் ரஞசன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் மீது மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு அமெரிக்க ஒப்பந்தத்தை செய்துகொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.
நாட்டில் மீண்டும் காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் யுகம் ஆரம்பமாகிவிட்டது. ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள் எதிர்பார்த்த யுகம் மலரவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.