செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார், செட்டிகுளம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 260 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பாடரீதியாக சமமான பங்கீடு இல்லாத காரணத்தால் கிராமப் புறத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களின் கல்வி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 94 ஆசிரியர்களின் பாடரீதியான வெற்றிடம் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளது.
மேலும் பாடசாலைகளில் இருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லுகின்ற ஆசிரியர்களுக்கு பதிலீடாக மீள் நியமனம் செய்வதில் காலதாமதங்கள் நிலவுவதால் வன்னிப் பிரதேசத்தில் கல்வி கற்கின்ற கிராமப்புறப் பாடசாலை மாணவர்களின் கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் பாரியளவில் பின்தங்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் வவுனியா வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செட்டிகுளம் பிரதேச கல்விச் சமூகத்தினராலும், பெற்றோர்களாலும் செட்டிகுளத்திற்கான புதிய கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கமைவாக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சு நாடு முழுவதும் புதிய கல்வி வலயங்களை உருவாக்கும் திட்டத்திற்கு அமைய செட்டிகுளமும் புதிய கல்வி வலயமாக கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த வரவு செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சின் விவாதத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைவாக கல்வி அமைச்சினால் செட்டிகுளத்திற்கான தனியான கல்வி வலயம் ஆரம்பிப்பதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.