ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடி, மற்றும் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இறுதி முடிவு எட்டுவதற்கும் ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எற்றப்பட்டுள்ள நெருக்கடி நிலையால் அதிருப்தியடைந்துள்ள உறுப்பினர்கள் விரைவில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்னும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
எனினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என ஐக்கிய தேசியக்கட்கியின் உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரியவை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்ததாகவும், வெள்ளிக்கிழமைக்குள் இறுதி முடிவு எட்டப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தலைமைத்துவம் குறித்த பிரச்சினைக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு காணமுடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் பின்னர் நாடாளுமன்ற குழு மற்றும் செயற்குழுவிற்கு இது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த விவகாரம் தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினை குறித்து இணக்கமான தீர்வு காணப்படாவிட்டால் சஜித் ஆரவு தரப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சிகளும் இணைந்து தனித்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பிளவுப்பட்டு செயற்படுவதற்கு பதிலாக இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வு காணவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர்.” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.