சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
திருகோணமலை மாவட்டத்தில் 1970ஆம் ஆண்டு முதல் சுதந்திரமாக சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு 2011ஆம் ஆண்டு முதல் அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
இதில் ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் சென்றே மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
கிண்ணியா, மூதூர், ஜமாலியா பிரதேசங்களில் சிறிய படகுகளை கொண்டே மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் சென்று மீன்பிடிப்பதில் உள்ள சிரமத்தை கடற்றொழில் அமைச்சர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அத்துடன் இந்த ஏழு கிலோமீட்டர் கட்டுபாடு திருகோணமலை உட்பட சில மாவட்டங்களிலேயே நடைமுறையில் உள்ளது. ஆகவே ஏன் திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு மட்டும் இந்த பாகுபாடு.
இந்த ஏழு கிலோமீட்டர் எல்லை கணிக்கப்படுவதிலும் பிரச்சினை உள்ளது. படகுகள் புறப்படும் கரையில் இருந்து கணிக்கப்படாமல் அவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு அண்மையில் உள்ள கரையில் இருந்தே கணிக்கபடுகிறது.
ஆகவே இது தொடர்பான உறுதியான நிலைப்பாடுகள் பேணப்பட வேண்டும். சிறிய படகுகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஏழு கிலோமீட்டர் என்ற எல்லையை குறைக்க வேண்டும்.
அல்லது இந்த பிரதேசங்களில் இறங்குதுறை அமைத்து அவர்களுக்கு மானிய விலையில் பலநாள் படகுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அத்துடன் சுருக்கு வலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதிலும் முறையான ஒழுங்குமுறை இல்லை. சில வருடங்கள் எட்டு மாதங்களுக்கும், சில வருடங்கள் பத்துமாதங்களுக்கும் என வழங்கப்படுகிறது. ஆகவே இதுவும் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் வழங்க வேண்டும்.
கடும் மழை வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும்போது மீனவர்கள் மாதக்கணக்கில் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
ஆகவே இக்காலப்பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணம் போல் மீனவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
இந்திய மீனவர்கள் எமது நாட்டுக்குள் வந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் எமது நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வது போன்றே வெளியூர் மீனவர்கள் எமது திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் எமது மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளை முகம்கொடுக்கின்றனர்.
இதனால் மீனவர்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டு குறிப்பாக குச்சவெளி புல்மோட்டை பிரதேசங்களில் அவர்களின் படகுகள் எரியூட்டப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆகவே வெளியூர் மீனவர்கள் எமது மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.