நாடாளுமன்றத்தில் அபத்தமான பேச்சுக்களை அனுமதித்த சபாநாயகரே அதற்கான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை சட்டங்களுக்கு அமைய நாடாளுமன்றம் இயங்குவது அவசியம் என்ற போதிலும் சபாநாயகரின் பலவீனமே சபை கட்டுப்பாடு அற்ற வகையில் இயங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்துபவர் சபாநாயகர். அவருடைய பலவீனத்தினால்தான் நாடாளுமன்றத்தில் சிறந்த செயற்பாடுகள் மற்றும் பழக்கங்கள் என்பன இல்லாமல் போகும் நிலையும் ஏற்படலாம்.
சில வேளைகளில் நிலையியற் கட்டளைச் சட்டங்களுக்கு அமைய விடயத்திற்கு முரணாக உரையாற்றுவதற்கு முடியாது.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட விவாதத்திற்கு அப்பாற் சென்று தனிப்பட்ட தங்களது விடயங்களைப் பேசியதை அவதானிக்க முடிந்தது.
சபாநாயகர் இல்லாவிட்டாலும் அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் நபர் யாராக இருந்தாலும் அதற்கு அனுமதி வழங்கியிருக்கக்கூடாது. அநாவசியமான சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டது.
மக்களும் பார்த்துக்கொண்டிருந்த போது அதனையும் மீறி செயற்பாடுகள் நடந்தால் சபாநாயகரே அதற்கான பொறுப்புக்களையம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.