நீதிமன்றத்திடம் இருந்து அரசாங்கம் தனக்கு பிணை அனுமதியை வழங்க நடவடிக்கை எடுத்தால் தன்னிடமிருக்கும் அனைத்து குரல் பதிவுகளையும் இரண்டே நாட்களில் அம்பலப்படுத்திக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் தாம் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அம்பலப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இன்றைய காலங்களில் அனைத்து இடங்களிலும் என்னால் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமான குரல் பதிவுகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொலிஸாரினால் மடிக்கணினி, இறுவட்டுக்கள், எனது தொலைபேசிகள் இரண்டு என்பவை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இப்போதும் நான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளேன்.
என்னால் பதிவுசெய்யப்பட்ட குரல் பதிவுகள் பலவும் குறிப்பிட்ட ஒரு வங்கியின் பெட்டகத்தில் உள்ளன. எனக்கு வெளியே செல்ல முடியவில்லை.
எனது சட்டத்தரணி உட்பட பலருடைய வீடுகளுக்கும் தற்போது ராஜபக்சவின் கைக்கூலிகள் சென்று தேடிவருகின்றனர். எனினும் அரசாங்கத்தினால் மறைக்கப்பட்ட குரல் பதிவுகளை வெளியிடுவதாகவே நேற்று சொன்னேன்.
இப்போது அரசாங்கத்தினால் குரல் பதிவுகளை தரவிறக்கம் செய்து பிரிப்பதற்காக சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அதற்கான தொழில்நுட்பமும் எனக்கு இல்லை.
குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றன. நான் வெளியே இருந்தால் அனைத்தையும் செய்திருப்பேன். விளக்கமறியலில் இருந்த பலரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.
உள்ளே இருந்துகொண்டு இவற்றை நிரூபிப்பதற்கு முடியாது என்பதை அவர்களுக்குத் தெரியும். இருப்பினும் நான் பல குரல் பதிவுகளையும் எனது செயலாளருக்கு வழங்கியிருக்கின்றேன். அவை தயார்படுத்தப்பட்டு வருகின்றன” என கூறியுள்ளார்.