அமைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன், அமைச்சராக பதவி ஏற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளதாக வடமாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, விமல் வீரவன்ச தமிழ் மொழியில் இருந்த பெயர் பலகையை சிங்கள மொழியில் மாற்றியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மன்னார் பகுதியில் கைத்தொழில் பேட்டை ஒன்றின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்த போது, பிரதான மொழியாக தமிழ் மொழியும், இரண்டாம் மொழியாக சிங்கள மொழியும் அப் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், அந்த பெயர்ப் பலகையில் பிரதான மொழியாக சிங்களத்தையும், இரண்டாம் மொழியாக தமிழையும் பொறித்து மீண்டும் வெளியிட்டிருந்தார்.
வடகிழக்கு பிரதேசங்களில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும், விமல் வீரவன்சவின் இந்த செயற்பாடு பல தரப்பினரிடமும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டது.
16ஆவது திருத்த சட்டத்தில் வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி அரச கரும மொழியாக இருக்கின்ற போது, அதை அமைச்சர் மீறியிருக்கின்றார்.
அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்யும் போது, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நடந்துகொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், அமைச்சர் அரசியலமைப்பை மீற முடியுமென்றால், சாதாரண மக்கள் மீறலாம் தானே.
சாதாரண மக்கள் மீறினால் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அமைச்சருக்கு அரசியலமைப்பில் உள்ள விடயங்கள் தெரிய வேண்டும். அதை தான் மீறுகின்றார் என்பதும் தெரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.