பிரபல நடிகர் ஷாருக்கானை இலக்கு வைத்து இலங்கையில் நடத்திய குண்டுத்தாக்குதல் குறித்த இரகசியங்கள் தனக்கு தெரியாது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
“ஷாருக்கான் இலங்கைக்கு வருகை தந்த வேளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து எனக்கு இரகசியங்கள் தெரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.
இவ்வாறு அவர் கூறியதை அடுத்து ஷாருக்கானை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தியது நானென சிலர் நினைத்துவிட்டனர்.
முகப்புத்தகத்தில் அவ்வாறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் ஷாருக்கானை இலக்கு வைத்து நடத்தியதாகக் கூறப்படும் குண்டுத் தாக்குதலில் சாதாரணமாக அனைவருக்கும் என்ன தெரியுமோ, காதுகளில் என்ன கதைகள் கேட்டதோ அதுமட்டுமே எனக்கும் தெரியும்.
அதைத் தாண்டிய இரகசியங்கள் எதுவும் எனக்கு தெரியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.