நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று(23) மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த வீதி விபத்தின் போது நிந்தவூர்ப் பிரதேசத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு இலக்காகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நிந்தவூர் அல்லிமூலைப் பிரதேசத்திலிருந்து அட்டப்பள்ளம் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம்; அறுவடையில் கிடைத்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அட்டப்பள்ளம் மத்திய வீதிக்குச் செல்வதற்கென பிரதான வீதியினைக் கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதுண்டதனால் மோட்டார் சைக்கிள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இவ்விபத்தின் போது படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். குறித்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன்,
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞருக்கு கால்ப் பகுதியில் உடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த உழவு இயந்திரத்தின் டயர் வெடித்து சிதைவடைந்தமையால் இப்பிரதேசத்தின் போக்குவரத்துகள் சிறிது நேரம் ஸ்தம்பித நிலை அடைந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறைப் பொலிஸார் போக்குவரத்தினை சீர் செய்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.