“ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பாக எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை.
அவ்வாறு இணைவது தொடர்பாக வெளிவந்த செய்திகள் பொய்யானவை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராகவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதும் இருக்கின்றார்.
ஆகவே அவர் எங்களது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளப்போவது தொடர்பிலோ அல்லது எதிர்வரும் தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிடப் போவதாகவோ எந்த முயற்சியும் இல்லை.
அவ்வாறு இணைந்து கொள்வது தொடர்பில் எங்களுடன் எந்தவிதமான பேச்சுக்களையும் அவர் முன்னெடுக்கவில்லை.
ஆகையால் எங்கள் கட்சியில் இணைந்து நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாகச் சொல்லப்படும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை.
எனக்குத் தெரிந்த வகையில் அவர் எங்களுடன் எந்தவிதமான பேச்சுகளையும் நடத்தவில்லை” என கூறியுள்ளார்.