ஈரானுடன் போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் மோசானமான பின் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்துவரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சென்றுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அங்கு சென்ற நிலையில், இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
குறித்தச் சந்திப்பில் சமீபத்தில் அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து இம்ரான் கான் டிரம்ப்பிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில், ஈரானுக்கும் மேற்கிந்திய நாடுகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டால் அது பேரழிவைத் தரும்.
இது உலகம் முழுவதும் வறுமையை ஏற்படுத்தும். அது எப்போது முடியும் என்று தெரியாது. எனவே, ஈரானுடன் போர் என்பது பைத்தியக்காரத்தனம்.
ஆப்கானிஸ்தானிலேயே பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ஈரானில் போர் புரிந்தால் அது மோசமான பின் விளைவுகளைத் தரும் என இம்ரான் கான் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்
முன்னதாக, ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் முன்னெடுத்துள்ளனர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டது.
இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு வலுத்துள்ளது. மட்டுமின்றி, ஈரான் அரசாங்கத்திற்கும் எதிராக பொதுமக்களின் கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.