அரசியலமைப்புச் சபை நாளை (24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர்.
19 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு இணங்க பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் அணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்புச் சபைக்கே உள்ளது.
அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை நேற்று (22) சபையில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாட்களை ஒதுக்கிக்கொள்வது குறித்து கலந்துரையாடுவது நாளைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரிய நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அதற்கான தினம் ஒதுக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று சபையில் சமர்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா முழுமைபடுத்தப்படாத அறிக்கையே சமர்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினர்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தமது குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து இறுவட்டுகளை பாராளுமன்றத்திடம் கையளித்துள்ளார்.
இந்த இறுவட்டுக்கள் பாராளுமன்றில் ஹென்சாட் தயாரிக்கும் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த குரல் பதிவுகள் தொடர்பில் இன்றும் (23) பாராளுமன்றத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றினார்.
அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர் ஹர்ஸ டீ சில்வா பதிலளித்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அந்த விவாதத்தில் இணைந்துக்கொண்டார்.