எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுகட்சி வடக்கு,கிழக்குக்கு வெளியே கொழும்பு தேர்தல் மாவட்டம் உட்பட மேல் மாகாணத்திலும் களமிறங்குவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையில் நேற்று பம்பலபிட்டியில் கூடியுள்ளது.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன்,தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது பொதுத்தேர்தல், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் இம்முறை கொழும்பிலும் களமிறங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.