இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்ஸருமாக விளாசியதால், அந்தணி இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான, மார்டின் கப்டில், கோலின் முன்ரோ இந்திய அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடிக்க, அந்தணியின் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் எகிறியது.
முன்ரோ 42 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, மார்டின் குப்தில் 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய கிராண்ட் ஹோம், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். ஆனால், இதற்கு பின்பும் நியூசிலாந்து வீரர்கள் அதிரடி காட்டினர்.
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 26 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராஸ் டெய்லர் 27 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
இப்போட்டியில் நியூசிலாந்து வீரர்கள், ஒரு ஓவரும் பவுண்டரி அல்லது சிக்ஸர் அனுப்பிக் கொண்டே இருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.