ஈரானின் புதிய இராணுவ தளபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அமெரிக்க தூதரை, ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கண்டித்துள்ளார்.
டிசம்பர் 27 அன்று ஈராக்கில் உள்ள ஒரு தளத்தில் அமெரிக்க சிவில் ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த ஜனவரி 3ம் திகதி அன்று, ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா கமேனிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்த குவாசிம் சுலைமானி அமெரிக்காவால் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பெரும் பதற்றம் நிலவி வந்த நிலையில், தெஹ்ரான் அமெரிக்கா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 11 வீரர்கள் காயமடைந்தனர். மற்றபடி இருநாடுகளும் இராணுவ மோதலில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் நேற்று லண்டனை தளமாகக் கொண்ட ஆஷர்க் அல்-அவ்சாத் அரபு மொழி செய்தித்தாளிற்கு பேட்டியளித்த ஈரானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி, குவாசிமை போன்று அமெரிக்கர்களை கொல்லும் வழியை பயன்படுத்தினால், புதிதாக நியமிக்கப்பட்ட ஈரான் இராணுவ தளபதி உயர்தளபதி எஸ்மெயில் கானி, அதே முடிவை சந்திப்பார் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், அரச பயங்கரவாதத்தை அமெரிக்க அதிகாரபூர்வமாக ஊக்குவிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், “[இஸ்ரேலின்] சியோனிச ஆட்சிக்குப் பின்னர், தனது அரசாங்கத்தின் மற்றும் ஆயுதப்படைகளின் வளங்களை பயங்கரவாத செயல்களுக்காகப் பயன்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவை தொடரும் என்றும் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ள இரண்டாவது ஆட்சி அமெரிக்கா” எனக்கூறியுள்ளார்.