கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் சீனாவில் சிக்கி தவிக்கும் 46 இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
சீனாவில் துவங்கி உலகின் பல நாடுகளுக்கும் தீவிரமாக பரவி வரும், கொரோனா வைரஸிற்கு அடுத்துதடுத்து உயிர்பலி ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஹூபேயின் வுஹான் நகரில் மட்டும் குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது மற்ற மாகாணங்களுக்கு பரவுவதை தடுக்கும் விதமாக பல மாகாணங்களில் போக்குவரத்து சேவைகளை முடக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் வுஹான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 45 இந்திய மாணவர்களும், 5-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வரும் கேரளாவை சேர்ந்த அனஸ் என்கிற மாணவரும் வுஹான் நகரத்தில் சிக்கியுள்ளனர்.
தங்களுக்கு அடுத்தது என்ன நடந்துவிடுமோ என்கிற அச்சத்திலே தினமும் இரவுகளை கழித்து வருகின்றனர். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த போதும், போக்குவரத்து தடையால் வெளியேற முடியவில்லை எனக்கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இங்குள்ள விடயங்கள் நாளுக்கு நாள் மிகவும் ஆபத்தானவையாகி வருகின்றன, மேலும் தற்போதுள்ளதை விட வரவிருக்கும் நாட்களில் வுஹானிலிருந்து வெளியேறுவது இன்னும் கடினமாக இருக்கலாம்.
நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். தாமதமாகிவிடும் முன்பு வீட்டிற்கு திரும்ப விரும்புகிறோம் என கூறியுள்ளனர்.
“நாங்கள் பீதியில் உள்ளோம். இது பல்கலைக்கழகத்தில் விடுமுறை நேரம். ஆனால் சீனாவில் ஊடக அறிக்கையின்படி, இது இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில், அது ஆபத்தானதாக இருக்கும் வரை இங்கு தங்குவது பற்றி நாம் சிந்திக்கக்கூட முடியாது, ”என்கிறார் அனஸ்.
மாணவர்களின் கூற்றுப்படி, வுஹான் நகரத்தைக் கடந்து பயண தடை விதிக்கப்படாத ஒரு மாகாணத்திற்கு வர அவர்களுக்கு உதவி தேவை.
மாணவர்கள் கூறுகையில், 46 இந்திய மாணவர்களில் 20 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சிலர் உணவகங்களில் வேலை செய்து வருவதால், ஒரு வாரத்திற்கு மட்டுமே அவர்களிடம் உணவு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.