கனடாவின் ரொறன்ரோவில் தமிழக மாணவி சரமாரியாக தாக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தந்தை ஆல்பர்ட் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பாடசாலை மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில் சிறந்து விளங்கிய தனது மகளை பொறாமையின் பேரில் சக மாணவரே தாக்கியிருக்கக் கூடும் என்று ஆல்பர்ட் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் பேசிய ஆல்பர்ட், எனது மகள்தான் அவளது வகுப்பறையிலேயே இளைய மாணவர்.
30-35 வயதை சேர்ந்தவர்கள் கூட அவளுடன் படிக்கிறார்கள், ஆனால் ரேச்சல்தான் படிப்பில் சிறந்து விளங்கி வருகிறாள்.
இந்நிலையில், தன்னிடம் ‘எப்படி நீ மட்டும் இவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாய்’ என்று அடிக்கடி கேட்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை தொந்தரவு செய்வதாக எனது மகள் என்னிடம் கூறியதுண்டு.
எனவே, அந்த சக மாணவர்தான் ரேச்சலை தாக்கி இருப்பாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கடந்த வாரம் ரேச்சல் தமது சமூக ஊடகங்க பக்கங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
“எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்.
ஆனால், இப்போது எந்த சம்பவத்தை எதனோடு தொடர்புபடுத்தி பார்ப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று ஆல்பர்ட் கண்கலங்கியுள்ளார்.
ரேச்சல் அடையாளம் தெரியாத நபரால் அவரது கழுத்துப் பகுதியில் பலமுறை குத்தப்பட்டு, சம்பவம் நடந்த நடைபாதையில் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக கனடாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில்,
தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதுடன் பின்புறம் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
எனது மகளின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோது, அவர் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாக கூறியுள்ளதை ஆல்பர்ட் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுதொடர்பாக ஏன் தங்களது செய்தியில் கனேடிய ஊடகங்கள் குறிப்பிடவில்லை என்று எனக்கு குழப்பமாக உள்ளது.
இந்திய வெளியுறவுத் துறையின் உதவியுடன், விசா கிடைத்த உடனேயே கனடாவுக்கு செல்ல உள்ளேன்.
நான் நேரில் சென்ற பிறகுதான் அனைத்து விடயங்களும் தெரிய வரும் என்று ரேச்சலின் தந்தை ஆல்பர்ட் கூறுகிறார்.
ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ரொறன்ரோ நகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும்,
தனது மகளின் உடல்நிலையை கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.