கொரோனா வைரஸ் பாதிப்பால் வெளியில் செல்லவே அச்சப்படுவதாக சீனாவில் சிக்கித்தவித்து வரும் தமிழக மாணவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் என்கிற நோய்த்தொற்றால் தற்போதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச அளவில் பரவி வருவதால் லட்சக்கணக்கிலான மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இவற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரஸானது சீனாவில் மீன், பாம்பு உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்யப்படும் வூஹான் சந்தையிலிருந்து பரவியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது மற்ற நாகரங்களுக்கும் பரவி விடக்கூடாது என்கிற அச்சத்தில், வூஹான் உள்ளிட்ட சில நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியிருக்கும் பொதுமக்கள், வெளிநாட்டினர் வெளியேற முடியமால் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சீனாவில் பயின்று வரும் தமிழக மாணவர்களான மணிசங்கர் (புதுக்கோட்டை), ராகுல் (ஈரோடு), மினாலினி (கோவை) ஆகியோர் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளனர்.
வைரஸ் நோய்த்தொற்றால் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே உணவு செய்வதற்கான பொருட்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இன்னும் சில தினங்களில் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் வர இருப்பதால் வணிகக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்கலைக்கழகங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் 3 நாட்கள் கழித்து என்ன செய்வது என தெரியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.
இதற்கிடையில் சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொண்டு, உதவி எண்களை அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.