வீட்டிலிருந்து ஓட்டம்பிடித்த காதல் ஜோடியின் கதையை கேட்டு உத்திரபிரதேச பொலிஸார், காவல் நிலையத்தில் வைத்தே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே தெருவில் வசித்து வந்த ராகுல் – நைனா என்கிற இளம்ஜோடி இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்கிற அச்சத்தில், இருவரும் கடந்த 7 மாதத்திற்கு முன்பாக பதிவு திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால் யாருக்கும் தெரியாதபடி வழக்கம்போலவே இருவரும் தங்களுடைய வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் இவர்களுடைய காதல் விவகாரத்தை அறிந்து கொண்ட நைனாவின் பெற்றோர், வீட்டிலிருந்து வெளியேற விடாமல் அடைத்து வைத்துள்ளனர். மேலும், ஒரு வாரத்திற்கு முன்பாக நைனாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடவும் ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர். நைனாவின் தந்தை ஜூஹி மகளை காணவில்லை என பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதனால் பொலிஸார் அடிக்கடி ராகுல் வீட்டிற்கு சென்று விசாரணை என்கிற பெயரில் தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனை அறிந்த ராகுல் நேற்று தாமாகவே பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.
அங்கு அவர்களுடைய காதல் கதையை கேட்ட பொலிஸார், உடனடியாக காவல் நிலையத்திலே திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்து சமாதானம் பேசியுள்ளனர். இறுதியாக இருவீட்டாரும் காதலை ஏற்றுக்கொள்வதாக கூறி, வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.