மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பலரும் தொடர்பு கொண்டிருந்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
என்ற போதிலும் புதிய அரசாங்கமும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சோஷலிச மக்கள் முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.
மிகப்பெரிய இந்த மோசடியை அரசியல் மயப்படுத்தி விசாரணைகளைத் திசைதிருப்ப ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருவதாக அந்த முன்னணியின் உறுப்பினர் டி.யூ குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்,
2015ம் ஆண்டில் நிதியமைச்சிற்கு கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கியை அப்போதைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க தம்வசப்படுத்திக்கொண்டார். இது சட்டவிரோதமாகும்.
ஏன் ரணில் விக்ரமசிங்கவிடம் யாரும் இதுபற்றி கேள்வி கேட்பதில்லை? இதற்குப் பின்னர் அரச துறையை தவிர்ந்த வேறு சந்தைகளில் கடன் கேட்பதற்கான வழியை மத்திய வங்கிக்கு அவர் அறிமுகஞ்செய்தார்?
வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை அவர் ஏன் வங்கியின் ஆளுநராக நியமித்தார்? அரசாங்கத்திற்கு ஒரு பில்லியயே தேவைப்பட்டபோது, அப்போதைய ஆளுநர் 20 பில்லியன் வாங்குமாறு ஏன் பணித்தார்?
அதனை மறுத்த பெண் அதிகாரியின் வாக்குமூலமே இந்த மோசடிக்கான பிரதான சாட்சியாகும்.
ஐந்து வருடங்களாகின்ற போதிலும் இப்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் சட்டநடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே இதற்கான அனுமதியை வழங்கியதாக அர்ஜுன மகேந்திரன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இப்போது திருடர்களும் ஆதாரங்களும் சிக்கியுள்ள நிலையிலும், இந்தப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்தி மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை மூடிமறைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துள்ளது.
ஐந்து வருடங்களாகியும் குறித்த 05 அறிக்கைகள் குறித்து விவாதம் ஒன்றுகூட நாடாளுமன்றத்தில் நடத்தப்படவில்லை என்பதுவே கவலைக்குரிய விடயமாகும்.
இந்நிலையில் மத்திய வங்கியின் தடயவியல் ஆய்வறிக்கை மீதான விவாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிகிற நிலையில் இந்த விவாதத்தையாவது ஒழுக்கமான, அர்த்தமான சிறந்த விவாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
சேறுபூசுவதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்த வேண்டாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.



















