நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் தற்போதைய புதிய அரசாங்கத்திற்கு தொடர்பிருப்பதாக ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மறைமுகமாக சாடியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில்-மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தவும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் காரணமாக இருந்த இந்த தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு ஒருவருடமாகின்ற நிலையிலும் இதுவரை பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலினால் மக்களிடையே இன ஐக்கியம் வீழ்ந்தததாக சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணமாகவே தமது அரசாங்கம் தோல்வியுற்றதாகவும் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தினத் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இந்த அரசாங்கம் கைது செய்யாது என்பதை தாம் நிச்சயமாகக் கூறுகின்றேன் என குறிப்பிட்ட அவர், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமைக்கான காரணம், ஈஸ்டர் தாக்குதல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது அரசாங்கத்தை அவமானத்திற்கு ஏற்படுத்துவதற்கான செயற்பாடாகவே இந்த தாக்குதலை சுட்டிக்காட்டுவதாக கூறிய அவர், தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்பதை தாம் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.