ஓய்வூதிய கொடுப்பனவுக்கான தமது வாழ்விட உறுதிப்பத்திரத்தை நிரப்பும்படிவம் தனி சிங்கள மொழியில் வந்துள்ளதால் சிங்களம் புரியாத தமிழ்பேசும் மக்கள் பெரும் சிரமத்துக்கு முகம் கொடுப்பதாக உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஊடகஅறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்திருப்பதாவது,
ஓய்வூதியம் பெறுபவர்களிடம் வதிவிட தகவல்களை சேகரிக்கும் படிவம் வருடந்தோறும் அதற்குரியவர்களுக்கு அனுப்பி வைப்பதுண்டு. கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழிலும் கிடைப்பதுண்டு.
ஆனாலும் இவ்வருடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள படிவம் தனி சிங்களத்தில் உள்ளது. இதன் காரணமாக சிங்களம் வாசிக்க தெரியாத முதியோர் பாரிய சிரமங்களை எதிர் நோக்குவதாக அரசின் பங்காளிக்கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் உலமா கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இது வேண்டுமென்றே செய்த ஒன்றாக இல்லாதுவிடினும் எங்கோ தவறு நடந்திருக்கலாம். ஆகவே எதிர்காலத்திலும் இத்தவறுகள் இடம் பெறாமல் இருப்பதை ஓய்வூதிய திணைக்களம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.