கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தி கடற்றொழில் துறையில் விரைவான அபிவிருத்தியை எட்டுவற்கு தொழில் தொடர்பான நம்பிக்கையை கடற்றொழிலாளர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கு தொடர்ந்தும் பயனாளிகளை உள்வாங்குவது தொடர்பான கலந்துரையாடல், ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் நேற்று (29) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது
குறித்த கலந்துரையாடலின்போது, மீண்டும் ஓய்வூதியத்திற்கு கடற்றொழிலாளர்களை உள்வாங்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மீண்டும் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட நிலையில், அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியதுடன் அது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
1990 ஆண்டு அமுல்படுத்தப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் ஊடாக சுமார் 69,000 பயனாளிகள் உள்வாங்கப்பட்டபோதும் நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக பயனாளிகளை உள்வாங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் தற்போது சுமார் 4860 கடற்றொழிலாளர்கள்; ஓய்வூதியத்தினை பெற்று வருகின்ற நிலையில், தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்றவகையில் ஓய்வூதியத் திட்டத்தினை மீளமைத்து தொடர்ந்து பயனாளிகளை உள்வாங்குதவற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடற்றொழில் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் செயற்பட்டு வருகின்ற நிலையில், கடற்றொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஓய்வூதியம் தொடர்பில் ஆராயபட்டுள்ளதுடன் வீட்டுத் திட்டம் மற்றும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈடு வழங்கப்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.