ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் நீடிப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவையே நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுகூட்டத்தில் ஏகமனதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.
இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அவரது அணியின் பலர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகள் நீடித்துவந்திருந்த நிலையில் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகமான சிரிகொத்தாவில் கூடியது.
தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கூடிய இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே கட்சியின் செயற்குழுவின் கால எல்லை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. புதிய ஆண்டின் முதலாவது கூட்டம் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டப்பட்ட நிலையில் செயற்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் கட்சியின் 59 உறுப்பினர்கள் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் 37 பேர் மட்டுமே செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது.
கடந்த செயற்குழு கூட்டத்தில் 68 பேர் அங்கம் வகித்த போதிலும் அதில் இருந்து சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ரோசி சேனாநாயக, இம்தியாஸ் பாக்கிர்மாக்கர், உள்ளிட்ட ஏழு பேரின் பெயர்கள் இம்முறை உள்ளடக்கப்படவில்லை.
பிரதான உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் அஜித் பி பெரேரா ஆகிய இருவரும் கடந்த காலங்களில் கட்சிக்குள் நடந்துகொண்ட விதம், கருத்துக்கள் முன்வைத்ததில் ஏற்பட முரண்பாடுகள் மற்றும் கட்சிக்குள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர்களும் தற்காலிகமான நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அடுத்த செயற்குழு கூட்டங்களில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வியாழக்கிழமை மீண்டும் கூடும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இறுதியான சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.