இந்தியாவில் துப்பாக்கி முனையில் 23 சிறார்களை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்த குற்றவாளியை பொலிஸார் சுட்டு வீழ்த்தி அனைவரையும் காப்பாற்றியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தின் Farrukhabad பகுதியை சேர்ந்த சுபாஷ் பாதம் என்கிற குற்றவாளி சமீபத்தில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் தனது மகளுக்கு பிறந்தநாள் எனக்கூறி உள்ளூரை சேர்ந்த அனைத்து சிறார்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று ஆறு முதல் 15 வயதுடைய 23 குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சிறார்களின் பெற்றோர்கள், சுபாஷ் வீட்டு கதவை தட்டியுள்ளனர். அப்போது ஒருவர், மட்டும் திறந்துகொண்டு உள்ளே சென்றபோது சுபாஷ் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், 8 மணி நேரமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர்.
ஆனால் பேச்சுவார்த்தை முயற்சிகள் எந்த பலனையும் அளிக்காத நிலையில், இறுதியாக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். உடனே சுபாஷ் துப்பாக்கி சூடு நடத்தியதால், பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே குற்றவாளி சுபாஷ் உயிரிழந்தான். மேலும் இரண்டு பொலிஸார் மற்றும் உள்ளூர் நபர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு சுபாஷின் மனைவி உடந்தையாக இருந்தாரா என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும், அவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். குழந்தைகளை காவல்துறையினர் வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றபின், ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் செங்கற்களையும் கற்களையும் வீசும்போது அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட 23 சிறார்களும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர் என கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுபாஷ், 2001 ஆம் ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.