வவுனியா மன்னார் வீதி குருமன்காடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்று காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த வீதியில் பயணிக்கும் அநேகமான பயணிகள் மற்றும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் குறித்த வீதி வழியாகப் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியதுடன் விசனமும் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை ஒளிப்பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என இராணுவத்தினர் இதன்போது தெரிவித்திருந்ததுடன், வேறு விடயங்களை கூறவும் மறுத்து விட்டனர்.
நாட்டில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கடந்த மாதம் கூறியதையடுத்து தற்போது சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















