கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுபவர்களிடமிருந்து அதிகளவில் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
வைரஸ் தொற்று குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அந்நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெயருவன் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இதுவரை, கொடிய கொரோனா வைரஸின் தாக்கத்தை கண்டறிய 20 நபர்களின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் குறித்த வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.