அல்-ஹாபிழ் வைத்தியர் M.A.C.M. சர்ஜூன் அவர்கள் இலங்கை திருநாட்டின் ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்டவர்.
அல்-ஹாஜ் அப்துல் காதர் – பௌசியா மரீனா தம்பதிகளின் அன்புப்புதல்வரான இவர், பொறியியலாளர் ஹுசைன் ரிஸ்வி, முர்ஷிதா சீரின் ஆகியோரின் சகோதரராவார்.
கடந்த வருடம் (2017) அமெரிக்காவின், சிகாகோ நகரில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் அல்-ஹாபிழ் சர்ஜூனின் கண்டுபிடிப்பொன்று முதலிடம் பெற்று இளம் ஆராய்ச்சியாளர் விருது (Young Investigator Award) வென்றது.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும்American Association of Immunologistsஏற்பாட்டில் சர்வதேச ரீதியான மாபெரும் விஞ்ஞான மாநாடு இடம்பெறும்.
இதில் உலகின் பல நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகள் பங்கு கொண்டு தத்தமது கண்டுபிடிப்புக்கள் தொடர்பாக முன்னிலைப்படுத்துகையை (Presentation) மேற்கொள்வர்.
இதில் 1,2,3 எனச்சிறப்பான மூன்று கண்டுபிடிப்புக்களுக்கு சர்வதேச விருதுகள் வழங்கப்படும். இம்மாநாட்டிலேயே இவர் கண்டுபிடிப்புக்காக முதலிடம் பெற்றுள்ளார்.
மட்டுமன்றி, வருடாந்தம் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளரைக் கௌரவித்து வழங்கும் ரிம்லர் ஞாபகார்த்த விருது (Rimler Memorial Award) வழங்கல் நிகழ்வு இவ்வருடம் (2018 இல்) அமெரிக்காவின் டென்வர் நகரில் இடம்பெற்றது.
இதில் இவ்வருடத்துக்கான கண்டுபிடிப்பாளர் விருதையும் அல்-ஹாபிழ் சர்ஜூன் தட்டிக்கொண்டார்.
இவரது கண்டுபிடிப்புக்கள் வைரஸ் கிருமிகள் சார்ந்தவை. அதிலும் குறிப்பாக, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தொற்றும் இன்ப்ளுவன்ஸா (Influenza Virus) எனும் தடுமல், காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகள் (பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், H1N1, H4N6, H2N2, H5N7 etc.) ஆகிய தாக்கத்திற்கெதிராக உடலினுடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு பதார்த்தத்தைக் கண்டுபிடித்ததே இளம் ஆராய்ச்சியாளர் விருதை (Young Investigator Award) இவருக்குப் பெற்றுத்தந்த ஆய்வாகும். அடுத்து வென்ற ரிம்லர் ஞாபகார்த்த விருது (Rimler Memorial Award) இவரது பல கண்டுபிடிப்புகளுக்குமானது.
அடுத்து இவர் குறித்து,
ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் தரம்-6 வரை மட்டுமே கல்வி பயின்ற இவர், அல்-மத்ரஸதுல் ரஷாதியாவில் அல்-குர்ஆன் மனனம் செய்யும் நோக்கில் 1989-90 காலப்பகுதியில் கொழும்புக்கு வந்தார்.
இலங்கையில் இன்றும் உள்ள பெரும்பாலான அரபு மத்ரஸாக்களைப் போன்றே, இங்கும் பாடசாலைக் கல்வி வழங்கப்படவில்லை. நாட்டில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்ந்ததால் மீண்டும் ஏறாவூருக்கே திரும்பினார்.
பின்னர், ஏறாவூர் குல்லிய்யத்துல் ஹிப்ழுள் குர்ஆன் மத்ரசாவில் குர்ஆன் மனனத்தைப் பூர்த்தி செய்தார். குர்ஆன் மனனத்தைத் தொடர்ந்து கிதாப் (மெளலவி) கற்கைக்கு பிறிதொரு அரபுக்கல்லூரிக்கு செல்ல வேண்டியேற்பட்டது.
குல்லிய்யத்துல் ஹிப்ழுள் குர்ஆன் மத்ரசாவில் கிதாப் பிரிவு இல்லாததால் இன்னொரு மத்ரசாவுக்கு அனுமதி கிடைக்க ரமழான் வரை காத்திருக்க வேண்டும். ரமழான் மாதத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன.
ஏக காலத்தில் தன்னுடன் பாடசாலையில் படித்த மாணவர்கள் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையை எதிர்நோக்கத் தயாராகி வருவதை அறிந்து, தரம்-6 வரையே கற்ற இவர் ஒரு திடீர் ஆசை உந்துதலால், பொழுதுபோக்கிற்காக தானும் அப்பரீட்சைக்கு (Private Candidate) விண்ணப்பித்தார்.
தரம் – 6 இல் கற்ற அறிவுடன் மூன்றே மாதங்களில் தயாராகி ஒருவரால் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையின் சகல பாடங்களிலும் சித்தி பெற முடியுமா?
ஆம், குர்ஆனை சுமந்த இதயத்தின் சக்தியால், இறைவனின் மகிமையின் வெளிப்பாடாக தனக்கு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் வெற்றி சாத்தியமானது என்கின்றார்.
இந்த ஹாபிழ். முதலில் சாதாரண தர கணிதம் உள்ளிட்ட பாடப் புத்தகங்களை பார்க்கும் போது சுத்த சூனியமாக (புரியாத புதிராக) இருந்ததாகவும், பின்னர், ஊரில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் சத்தார் ஆசிரியரை அணுகி கணிதம் கற்பிக்கக் கூறியவுடன், அவர் சிரித்து விட்டார்.
ஆறாம் ஆண்டு கணித அறிவுடன் எப்படி இது சாத்தியம் என்று கேட்டிருக்கின்றார். பரவாயில்லை சேர், எப்படியாவது கற்பியுங்கள் என ஆர்வம் ததும்பக்கேட்டார் ஹாபிழ் சர்ஜூன்.
மஹ்ரிப் முதல் இஷா வரையான அந்த வகுப்புக்களுக்கும் சென்று தன்னை தயார்படுத்திய இவர், சாதாரண தரம் மூன்று பாடங்களில் அதி விஷேட சித்தியுடன் சகல பாடங்களிலும் சித்தி கண்டார், மாஷா அல்லாஹ்!
அதுதான் இவரது வாழ்வின் திருப்புமுனை என்கின்றார். மௌலவியாக வர கிதாப் கற்கைக்கச் செல்லவிருந்த இவருக்கு படிப்பின் பக்கம் ஆர்வம் ஏற்பட்டது.
தொடர்ந்து நன்றாகக் கற்க வேண்டுமென்ற வேட்கையுடன் க.பொ.த. உயர்தரம் கற்கையை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கற்று, பல் அறிவியல் துறையில் பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றார்.
குடும்பத்தாரினதும், பிறரினதும் ஆலோசனையின் பிரகாரம் பல் அறிவியல் துறைக்கு செல்லாமல், கால்நடை மருத்துவத்துறையில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2ndupper தரத்தில் பட்டம்பெற்றார்.
பட்டப்படிப்பின் பின்னர், ஹலால் விழிப்புணர்வு செயற்குழுவின் தொழிநுட்பப்பிரிவுத் தலைமை அதிகாரியாக 2-3 வருடங்கள் பணியாற்றினார். அடுத்து, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.
அங்கு நுண்ணுயிரியல், குருதி சுற்றோட்டத்தொகுதி, நோயெதிர்ப்பு சக்தி சம்பந்தமான பாடங்களக் கற்பித்தார். அங்கு விரிவுரை நிகழ்த்தி வரும் காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் மூலம் கனடா அரச புலமைப்பரிசில் குறித்து அறிமுகம் கிடைக்க, அதற்கு விண்ணப்பித்ததில் கனடா University of Calgary முதுமாணிக் கற்கைக்கு தெரிவானார்.
தற்போது கனடா, கல்கரி நகரில் வசிக்கும் இவரது குடும்பத்தின் முழுச்செலவையும் கனடா அரசாங்கமே பொறுப்பேற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.
கனடா வந்து முதுமாணிக் கற்கையை முடித்து விட்டு, வைரோலோஜி (Virology) எனப்படும் வைரஸ் சார்ந்த துறையிலேயே PhD கற்கையையும் ஆரம்பித்துள்ளார்.
சாதாரணமாக PhD கற்கையை மேற்கொள்வோர் தமது PhD ஆய்வு குறித்த 2 அல்லது 3 Journal Publications செய்ய வேண்டும். சிலர் அதையும் செய்யக் கஷ்டப்படுவதுண்டு. ஒரு Journal என்பது 4-5 கண்டுபிடிப்புக்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வறிக்கை.
ஆனால், இவர், தனது PhD ஆய்வு குறித்து கடந்த நான்கு வருடங்களில் 15 Journal Publications மேற்கொண்டுள்ளார். இவர் எனக்கு அனுப்பிய ஒரு Journal ஒன்றில் மட்டும் 7 கண்டுபிடிப்புக்கள் உள்ளடங்கியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார் (மன்னிக்கவும், அது முற்றிலும் மருத்துவ குறியீடுகளும், மருத்துவ சொற்றொடர்களும் அடங்கியிருப்பதால் என்னால் இங்கு விபரிக்க முடியவில்லை).
மேலும், ஒரு புத்தக அத்தியாயமும் (A Text Book Chapter) எழுதியுள்ளார். 20 இற்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் தனது ஆய்வு முன்னிலைப்படுத்துகைகளை (Research Presentations) மேற்கொண்டுள்ளார்.
PhD பூரணப்படுத்தியவர்களுக்கே இவ்வளவு அங்கீகாரமும், சந்தர்ப்பங்களும் கிடைப்பது அரிது, என்றாலும், தான் இன்னும் PhD கற்று வரும் நிலையில், இறைவனின் மாபெரும் கிருபையால் இத்தனை நகர்வுகளை மேற்கொண்டிருப்பது ஒரு சாதனை தான் என்று கூறுகின்றார்.
சிறு வயது முதலே விஞ்ஞானத்துறைக்கு ஊக்கப்படுத்தியது இவரது உறவுமுறை சகோதரர் ரஷீத் என்பதாகவும், இவர் நியூயார்க்- இலங்கைத் தூதரகத்தில் அலுவலராகக் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கின்றார்.
“சிறு வயதில் நான் மத்ரஸாவில் ஓதி வரும் காலங்களில் சகோதரர் ரஷீதின் உயர்தர விஞ்ஞான கற்கைத்திறனைக் கண்டு ஆச்சரியப்படுவதுண்டு. அதுவொரு உற்சாக வித்தாக இருந்தது.
அடுத்து, தற்போது கனடாவிலிருக்கும் எனது பேராசிரியர் அவர்கள் மற்றும் எல்லாம் வல்ல இறைவனின் உதவி ஆகியனவே இந்த விருதுகள் என்னை வந்தடையக் காரணமாகின” என்று குறிப்பிட்ட இவர், ஈருலகிலும் வெற்றியை எதிர்பார்த்தவராக, இறை பொருத்தத்துடன் வாழ்ந்து, தன்னால் இயன்ற இவ்வுலக முயற்சிகளுக்குப் பிரதிபலனாக, மரணித்தபின், மறுமையில் உயர்ந்த சுவர்க்கத்தை அடைவதே தனது இலக்கு என்பதாகக் குறிப்பிடுகின்றார்.
“பணிவும், அவமானங்களைத் தாங்கும் இதயமுமே ஒரு மனிதனை சிறந்த அடைவுகளை நுகர வழியமைக்கும், இது இறைவனின் வாக்கு. தீராத தாகம், அயராத முயற்சி இருந்தும் பெருமை என்ற குணமிருந்தால் இறைவன் அவனை கேவலப்படுத்துவான். பொறுமையுடன் இருப்போர்க்கு வெற்றி நிச்சயம்” என இளையோர்க்கு தனது அறிவுரைகளையும் உதிர்க்கின்றார்.
“அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே), பெற்றோர், ஆசிரியர்கள் (உஸ்தாத்மார்), பேராசிரியர்கள், சகோதரர்கள், உறவினர், கனடா வாழ் சகோதரர்கள், பல வழிகளிலும் உதவிய மனிதர்கள், மனைவி மற்றும் குடும்பத்திற்கும் நன்றி” பகர்கின்றார்.
அண்மையில் ஏறாவூர் தாருல் உலூம் ஹாபிழ்கள் ஒன்றியமும், உயிரோட்டமான வள நிலையமும் இணைந்து இலங்கையில் விழாவொன்றை ஏற்பாடு செய்து “ஆச்சரியமான ஆராய்ச்சியாளர் விருது” வழங்கி இவரை கௌரவப்படுத்தினர்.
அருமை நபி முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தனது முன்மாதிரியாக வைத்து வாழ்ந்து வரும் அல்-ஹாபிழ் சர்ஜூன் அவர்கள், மிருக வைத்தியராகி, அரச பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளராகி, சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு கண்டுபிடிப்பாளராக இன்று மிளிர்ந்து வருகின்றமை உலக அறிவைப் புறக்கணித்துப் பேசுவோருக்கு ஒரு அதிசய பாடம்!