அம்பாள் ஆலயத்தில் நேர்த்திக் கடனுக்காக அம்பாளுக்கு அணியுமாறு பூசகரிடம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது. இந்த விடயம் வெளிவந்ததை அடுத்து பூசகர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து ஆலய நிர்வாகத்தினர் பொலிசாருக்கு அறிவிக்காமல் மௌனமாக இருப்பது குறித்து பக்தர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 50 வயதுடைய பெண்ணொருவர் மகனின் நேர்த்திக் கடனுக்காக குறித்த ஆலயத்திற்கு சென்று, ஆலய பூசகரிடம் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை அம்பாளுக்கு அணியுமாறு கொடுத்துள்ளார். அம்பாளுக்கு அர்ச்சனை செய்து பூசகர், பிரசாதத்தை பெண்ணிடம் வழங்கினர்.
இரு தினங்களுக்கு பின் ஆலயத்திற்கு சென்ற அந்தப் பெண், அம்பாளின் கழுத்தில் சங்கிலி காணப்படாமையால் பூசகர் மீது சந்தேகம் கொண்டு, அந்த சங்கிலியை பெற்றமைக்கான பற்றுச்சீட்டை தருமாறு கோரினார்.
இரு தினங்களுக்கு பின்னர் அவரால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டில் சந்தேகமடைந்த பெண்மணி, ஆலயத்தின் அலுவலகத்தில் பற்றுச்சீட்டை காண்பித்தபோது, அது போலியானது என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஆலய நிர்வாகத்துக்கு அறிவித்துள்ள அந்த பெண்மணி, கிராம சேவகரின் உதவியுடன் மீண்டும் ஆலயத்திற்கு சென்று நடந்தவற்றை விவரித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆரம்பத்தில் பலர் மீது குற்றம் சுமத்திய பூசகர் மறுநாளிலிருந்து ஆலயத்திற்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆலய நிர்வாகம் மௌனமாக இருப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.