அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஈரானியர்கள் சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என முதன்மை ராணுவ தளபதி ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஈரானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய ராணுவ ஆலோசகருமான ஹொசைன் தேகன் என்பரே உணவு கட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் உச்ச தலைவர் ருஹொல்லா கோமெய்னியின் போதனைகளை ஈரானியர்கள் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ராணுவ தளபதி தேகன்,
அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானியர்கள் உணவு கட்டுப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீது அதிகபட்ச அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
2018 ஆம் ஆண்டு ஒபாமா கால அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியதிலிருந்து ஈரான் மீது இலக்கு வைத்து பொருளாதார தடைகளை அதிகரித்து வருகிறது.
இதனிடையே அணுசக்தி பிரச்சினைகள், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் மத்திய கிழக்கில் ஈரானிய நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய ஒப்பந்தத்தை விரும்புவதாக டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால் ஈரானிய நிர்வாகம் டிரம்பின் கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலளித்தது இல்லை.
அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு தீர்வாக ஈரானியர்கள் குறைவாக சாப்பிடுமாறு அதிகாரிகள் தரப்பு அறிவுறுத்துவது இது முதல் முறை அல்ல.
ஈரானின் எரிசக்தி அமைச்சர் ரெசா அர்தகானியன் 2019 ஆம் ஆண்டு ஈரானியர்களின் உணவுப் பழக்கத்தை விமர்சித்ததுடன், அவற்றை சீன மக்களின் உணவுப் பழக்கத்துடன் ஒப்பிட்டும் பேசியுள்ளார்.
மட்டுமின்றி கார்டியன்ஸ் கவுன்சில் மற்றும் நிபுணர்களின் சட்டமன்ற தலைவரான அஹ்மத் ஜன்னதியும் இதே கருத்துக்களை 2014 இல் தெரிவித்திருந்தார்.
நிலைமை மோசமடைய நேர்ந்தால், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவது ஒரு சாத்தியமான தீர்வாக இருக்க வேண்டும் என அமெரிக்கத் பொருளாதாரத் தடைகளைக் குறிப்பிட்டு ஜன்னதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.