திருகோணமலை கடற்கரையில் நீராடிய மாணவன் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் நீராடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மேற்படி மூன்று இளைஞர்களும் மரண வீட்டுக்குச் சென்று பின்னர் கடலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது, ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து, பொலிஸ் கடல் பாதுகாப்புப் பிரிவினர் தேடுதல் நடத்தி, பின்னர் ஒரு மணி நேரத்தின் பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர், 17 வயதுடைய ஜெரோம் எனவும், இவர் கடந்த வருடமே க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதியவர் என்றும் தெரிய வருகிறது.
இளைஞனின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.