ஒற்றையாட்சியின் கீழ் அனைவரும் இணைந்து வாழும் நிலை ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள பாடுபட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர், மலாயர் தலைவர்களுக்கு தாம் கௌவரம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின பொது நிகழ்வு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
எனக்கு வாக்களித்தவர்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியாக இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஜனாதிபதியாக நான் செயற்படுகிறேன்.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சகல உரிமைகளும் உள்ளன. மத சுதந்திரம் மாத்திரமன்றி சமாதானத்துடன் வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளது. மக்களுக்கு சுமையாகியுள்ள வரிகள் மீளமைக்கப்பட வேண்டியுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைவருக்கும் சமமாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். பௌத்த தர்மத்தை வளர்க்க எமது காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒற்றையாட்சியின் கீழ் அனைவரும் இணைந்து வாழும் நிலை ஏற்படுத்தப்படும். ஊடகங்களுக்கு இன்று முழு சுதந்திரம் உள்ளது. எவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக கூறமுடியும்.
எனினும் சமூக ஊடகங்களில் இன்று பலர் மாற்றுக்கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை மாற்றி அனைவரும் நாட்டை பற்றி சிந்தித்து செயற்படவேண்டும்.
அரசாங்கம் வேறு திசையில் செல்வதாக நினைத்தால் அதனை சுட்டிக்காட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.