தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரை இயக்கிய இயக்குனர் நீராவி பாண்டியன் தற்போது மெகா தொடர் ஒன்றை இயக்கி வருகின்றார். நேற்று, இதன் படப்பிடிப்பு, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சி காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்த போது 50க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் அழைத்து வரப்பட்டு இருந்தனர்.
அப்போது துணை நடிகைகளை ஆபாசமான வார்த்தைகளில் மைக்கில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த துணை நடிகைகள், அங்கிருந்து வெளியேறி திருவேற்காடு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நீராவி பாண்டியன் மற்றும் அவருடன் இருந்த இருவரை காவல்நிலையத்துக்கு கொத்தாக தூக்கிச் சென்றனர்.
பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் துணை நடிகைகள் 15 பேர், தங்களிடம் இயக்குனர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர். 1 மணி நேர பேச்சுவார்த்தை முடிவுக்கு பின் 3 பேரையும், திரும்பவும் திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கிருந்த துணை நடிகைகளிடம் மைக் மூலமாக இயக்குனர் நீராவி பாண்டியன் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார். இதன் பின்னர், துணை நடிகைகள் திருவேற்காடு காவல்நிலையத்தில் அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றிருக்கின்றனர்.