நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பலமான அரசாங்கமொன்றும் சக்தி வாய்ந்த நாடாளுமன்றமும் அவசியமாகும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சக்தி வாய்ந்த நாடாளுமன்றமொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவில்லை.
எமது கட்சியின் தலைவர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவாகும். அவருக்காக மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.
என்றாலும் மஹிந்த ராஜபக்ச அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார். ஐ.தே.கவுடன் அரசு அமைப்பது பொருத்தமற்ற செயற்பாடாக இருந்த போதிலும் அன்று கட்சியின் தீர்மானத்துக்கமைய தேசிய அரசை அமைத்தோம்.
சிறிது காலத்திலேயே தேசிய அரசில் பயணிப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டோம்.
ஐ.தே.க. அரசால் மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி மோசடி தொடர்பில் நாம் தான் முதலில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம்.
ஐ.தே.கவின் சட்டவிரோதமான செயற்பாடுகள் காரணமாகத்தான் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மீண்டும் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றே அனைவரும் தீர்மானித்திருந்தனர். அதன்படிதான் பணிகளையும் செய்தோம். அதனால் சஜித் பிரேமதாஸ படுதோல்வியடைந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட சிலர் யோசனையொன்றை முன்வைத்தனர்.
ராஜபக்சர்களைத் தோற்கடிக்க சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே அந்த யோசனையாகும். என்றாலும் நாம் அந்த யோசனைக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் வானமும் பூமியும் போன்றவை. ஒருநாளும் ஒன்றிணைந்து பயணிக்க முடியாத இரு கட்சிகளாகும்.
சமகாலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பலமான நாடாளுமன்றமும் அரசும் அவசியமாகும்.
அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க பொதுமக்களுக்கு ஏப்ரல் மாத பொதுத் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்கும். அந்த உயரிய பொறுப்பு நாட்டு மக்கள் கைகளிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.