நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகரான விஜய் தற்போது லோகேஸ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று நெய்வேலியில் நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று வருமான வரித்துறையினர், விஜயிடம் விசாரணை நடத்தினர்.
நேற்று துவங்கிய இந்த விசாரணை தற்போது வரை தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக் கொண்டதன் காரணமாக அபராதத்தோடு தப்பினார்.
தற்போது அவர் மீண்டும் வருமான வரி ஏய்ப்பு செய்திருந்தால், நிச்சயமாக கைது செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது.
மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது, அவரை அச்சப்படுத்துவதற்காக இந்த வருமான வரி சோதனை நடப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் நடிகர் விஜயை விட, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இருக்கின்றார். ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 126 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார், அவரின் வீட்டில் ஏன் வருமான வரி துறையினர் சோதனை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.