காலம் மாறினாலும் பெண்களை ஒரு காட்சிப் பொருளாக பார்ப்பதை இன்று வரை சில ஆண் வர்க்கத்தினர் கைவிடவில்லை.
இவ்வாறானவர்களால் எத்தனை பெண்கள்… குடும்பம், நண்பர்கள், சமூகம், கல்வி கற்கும் இடங்கள் , தொழில் புரியும் இடம் என பார்க்கும் இடம் எல்லாம் சில காம வெறியர்களின் துன்புறுத்தலால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
அதனை தங்கமுடியாத சிலர் தற்கொலை முயற்சிகளிலும், சிலர் முன்னேற முடியாமல் ஒதுங்கி அடங்குவதையும் , சிலர் அவர்களுக்கே இரையாகி தம் வாழ்வை நாசமாக்கி தொலைத்த சம்பவங்களும் நம் தமிழர் பிரதேசத்தில் தொடர்கதையாகவே இருக்கின்றது.
இன்றைய சூழலில் வாழும் பெண்கள் பெற்ற தந்தை, கூட பிறந்த சகோதரர்களையே தமது பாதுகாப்பு ரீதியில் சந்தேக கண் கொண்டு பார்ப்பதற்கு காரணம் இவர்கள் போன்ற ஒரு சிலரின் நடத்தைகளே.
இதனையும் தாண்டி படித்து பட்டம் பெற வேண்டும் என்று பல கனவுகளோடு பல்கலைகழகங்களில் கால் எடுத்து வைக்கும் பெண்களில் எத்தனையோ பேர் பகிடிவதை காரணமாக படிப்பை இடை நிறுத்தியும், தற்கொலை செய்து கொண்டும் உள்ளனர்.
இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை உங்கள் காம ஆசையால் பலியாக்க போகின்றீர்கள்?எப்போது தான் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தாமல் பெண்களின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கப் போகின்றீர்கள்?
இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்களில் சிலர் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதால் தற்கொலை முயன்றுள்ளார் ஓர் மாணவி.
குறித்த மாணவியிடம் குளியலறையில் நின்று படம் எடுத்து அனுப்புமாறு நிர்ப்பந்தித்ததுடன்,மாணவியின் வாட்சப் குரூப்பில் படத்தையும் பகிர சொல்லி இருப்பாதாக தகவல். இந்நிலையில் குறித்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் வர்க்கத்தினரே சிந்தியுங்கள். நாளை உங்கள் சகோதரியோ அல்லது உங்கள் வழ்க்கைத் துணையோ இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்.
நம் தமிழினத்திற்கு நீங்கள் பெருமை சேர்க்காவிட்டாலும் பரவாய் இல்லை. காலம் காலமாக நம் மூதாதையர்கள் கட்டிக்காத்த பண்புகளை இழிவு படுத்தாதீர்கள்.
கடந்த பத்து வருடங்களிற்கு முன்னர் இதை நீங்கள் செய்திருந்தால் இன்று உங்கள் நிலை வேறுமாதிரியாகவிருக்கும். வரலாறுகள் தெரியவில்லை எனில் பெற்றோர்களை கேட்டுக்கொள்ளுங்கள். நாளைய சமுதாயம் உங்களைபோன்றவர்கள் கைகளில் என்பதை நினைக்கும்போது மனம் கலங்குகின்றது.
பெண்தானே என இழிவாக நினைக்காதீர்கள்… உங்களை ஆக்கத்தெரிந்த அவளுக்கு அழிக்கவும் தெரியும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
குறித்த புகைப்படத்தில் உள்ளவர்களே மாணவிகளிடம் இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டவர்கள் என உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இப்படியாணவர்களின் இந்த சீரழிவான நடவடிக்கைக்கு பெற்றோர்களும் புலம்பெயர்வாழ் உறவுகளான சில பரதேசிகளுமே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக சைக்கிளிலும் கால்நடையாகவும், பேருந்துகளிலுமே பலகலைக்கழகங்களுக்கு பிள்ளைகள் சென்றுவந்தார்கள். பெற்றவர்கள் கஸ்ரப்படுவதை உணர்ந்து கொண்ட சமுதாயமாக அக்காலம் அமைந்திருந்தது.
ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது . பிள்ளைகள் பல்கலகழகத்திற்கு தேர்வாகிவிட்டார்கள் என வெளிநாட்டிற்கு தொலைபேசி அழைப்புக்கள் பறக்க, அங்கு குளிரில் உறைந்து வயிற்றைகட்டி வாயைகட்டி சேமிக்கின்ற காசில் 8 லட்சம் 10 லட்சம் என மோட்டார்சைக்கிள் வாங்கு என யோசிக்காமல் பணம் அனுப்புபவர்களால்தான் இவ்வாறான ஊதாரிகள் உருவாக்கப்படுகின்றார்கள்.
ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள் புலம்பெயர் உறவுகளே. இப்படியான ஊதாரிகளையும் ஒழுக்க கேடானவர்களையும் உருவாக்குவது ரத்தம் உறையவைத்து நீங்கள் சம்பாதிக்கும் பணம்தான். அத்துடன் இந்த காவாலிகளை பெற்ற பெற்றோர்களே உங்களுக்கும்தான். பத்துபேரிடம் கையேந்தி மோட்டார்சைக்கிள் வாங்கிக்கொடுத்துதான் உங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் விடுகின்ற இவ்வாறான தவறுகளால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நீங்களே இருண்ட யுகத்திற்கு அழைத்துசெல்கின்றீர்கள் என்பதை மறவாதிருங்கள். ஊதாரியாக உங்கள் பிள்ளைகள் வளர யார் காரணமோ அவர்களிடமெ நாளை பிள்ளைகளின் இறுதி கிரிகைகளுக்காவும் பணம் கேட்கவேண்டிய தேவை ஏற்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பாரம்பரியத்திற்கும் பழக்கவழக்கத்திற்கு பெயர்போன வடக்கு கிழக்கின் தற்போதைய நிலை எப்படி இருக்கின்றது தெரிகின்றதா? இப்படியொரு கேவலமான கலாச்சாரத்தை உருவாக்கவா யுத்த காலத்தில் உங்கள் பிள்ளைகளை பாதுகாத்தீர்கள்? நாளைய சமுதாயம் மண்ணோடு போவதற்கு நீங்களும், புலம் பெயர் உறவுகளுமே காரணம் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
நிலமை இப்படியே சென்றால் யாழ்ப்பாண சமூகம் என்ற ஒரு வரலாறே நாளைய சந்ததிகளின் சாபக்கேடாய் அமைந்துவிடும் என்பதியும் நினவில்கொள்ளுங்கள்.